1. அருள்மிகு நடராஜர் கோயில்
இறைவன் திருமூலநாதர், நடராஜர்
இறைவி சிவகாமியம்மை, உமையம்மை
தீர்த்தம் சிவகங்கை
தல விருட்சம் தில்லை, ஆலமரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் சிதம்பரம், தமிழ்நாடு
வழிகாட்டி சென்னை, மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகள் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 20 நிமிட நடைபயண தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. பேருந்தில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.
தலச்சிறப்பு

Chidambaram Gopuramசைவ உலகில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம். பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம். எல்லாக் கோயில்களிலும் அர்த்தயாம வழிபாடு முடிந்த உடன் சிவகலைகள் அனைத்தும் இத்தலத்தில் ஒடுங்குவதால் "திருமூலட்டானம்" என்று அழைக்கப்படுகிறது. தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் 'தில்லையம்பலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவர் 'நடராசர்' திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் மட்டுமே மூலவரும், உற்சவரும் ஒரே மூர்த்தி. நடராசரின் இடதுபுறம் சிவகாமி அம்மையும், வலதுபுறம் "சிதம்பர ரகசியம்" எனப்படும் அறையும் உள்ளது. இந்த அறையில் வில்வ இலை ஒன்று தொங்க விடப்பட்டிருக்கும். அம்பிகை 'சிவகாமியம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். வெளிப்பிரகாரத்தில் அம்மன் சன்னதி உள்ளது. உள்பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஆதிமூலநாதர்-உமையம்மை சன்னதி உள்ளது.

Chidambaram Moolavarஇந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலகங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றிணையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.

Kanakasabaiஇத்தலத்தில் தெற்குக் கோபுர வாசல் வழியாகத் திருஞானசம்பந்தரும், மேற்குக் கோபுர வாசல் வழியாகத் திருநாவுக்கரசரும், வடக்குக் கோபுர வாசல் வழியாகச் சுந்தரரும், கிழக்குக் கோபுர வாசல் வழியாக மாணிக்கவாசகரும் சென்று நடராசப் பெருமானை வழிபட்டனர். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதால் "பெரும்பற்றப்புலியூர்" என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் நடராசப் பெருமான் சன்னதிக்கு அருகில் கோவிந்தராசர் சன்னதியும் அமைந்துள்ளது. இந்தச் சன்னதியே 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான "திருசித்ரக்கூடம்" ஆகும்.

Chidambaram Utsavarதேவாரம் எழுதப்பட்டிருந்த ஓலைகள் இங்குள்ள ஒரு அறையில்தான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த ஏடுகளை நம்பியாண்டார் நம்பிகளின் துணைக்கொண்டு அபய குலசேகர சோழமன்னன் வெளிப்படுத்தினான். அநபாய சோழன் காலத்தில் சேக்கிழார் பெரியபுராணத்தை இங்குதான் அரங்கேற்றினார்.

மெய்ப்பொருள் நாயனார், திருநீலகண்ட நாயனார், கோட்செங்கண் சோழ நாயனார், கணம்புல்ல நாயனார், நந்தனார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் போன்ற அடியார்கள் முக்தி பெற்ற தலம்.

Nalvar with Sekkizharஅருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 8 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் ஆக மொத்தம் 11 பதிகங்கள் பாடியுள்ளனர்.

மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் 30 இடங்களில் இத்தலத்தைப் பாடியுள்ளார். 9-ம் திருமுறையிலும் போற்றப்படும் தலம்.

இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com